சினிமா: 18 -. ’பியாட்டா’ : உடலின் பொருளியல் பிம்பம்

கிம் கி-டுக்கின் 18வது சினிமா பியாட்டா (2012). பியாட்டா என்றால் இத்தாலிய மொழியில் கருணை என்று பொருள். கன்னிமேரி இறந்த யேசுவின் உடலை தனது மடியில் கிடத்தியுள்ள புகழ்பெற்ற மைக்கல் ஆஞ்சலோவின் ஓவியத்தின் பெயர் பியாட்டா. மதங்களின் கருணை முதலாளித்துவத்தின் உச்ச வளர்ச்சியில் முற்றிலுமாக பணஉறவாக மாறிவிட்ட நிலையில் அதன் வடிவம் பலிவாங்குதலாக கொலையாக மாறி உள்ளதை காட்சிப்படுத்துவதே கிம் கி-டுக்கின் பியாட்டா. வன்முறை, பாலியல் என்ற தனது வழக்கமான உடல் மொழியில் உலகமயமாதல் உருவாக்கியுள்ள பொருளியல் நெருக்கடியில் மனித உடலும் உறுப்புகளும் பணத்திற்குள் சிக்கி சிதைந்து ஊனமாகிப்போகும் உடல்கள் பற்றியதாக வெளிவந்து உள்ளது இத்திரைப்படம்.

உலகமயமாதல் உருவாக்கி உள்ள எல்லா மனிதர்களும் கடன்காரர்களாக வட்டி மூலதனத்தில் சிக்குண்டவர்களாக ஆக்கப்பட்டு சிறுதொழில்களை, தொழில் பட்டறைகளை  நம்பி உள்ள மனிதர்கள் தங்கள் உறுப்புகளை விற்றுப் பிழைக்கும் நிலை எப்படி சட்டரீதியாக முதலாளித்துவத்தின் காப்பீட்டு கழகங்கள் வழியாக நடந்தேறுகிறது என்பதையே தனது மொழியில் வெளிப்படுத்தி உள்ளார் கிம் கி-டுக். வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் லைன் விருதுபெற்றது இத்திரைப்படம். வெனிஸ், கான்ஸ், பெர்லின் திரைப்பட விழாக்களில் பரிசுபெற்ற ஒரே தென்கொரியப்படம். பல திரைப்பட விழாக்களில் விருதுபெற்ற இத்திரைப்படம் சிறந்த அயல்மொழிப்படத்திற்கான 2013 ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அமேரிக்க லேமேன் வங்கி வீழ்ந்ததை ஒட்டி உலகெங்கிலும் பொருளாதார நெருக்கடி வெளிப்படத் துவங்கியது. அமேரிக்காவில் வங்கிக் கடனாளிகளாகிப் போனவர்கள் தங்கள் சொத்துக்களை இழந்து நடுவீதிக்கு வந்தனர். பொருளாதார வீழ்ச்சி அரபு புரட்சி துவங்கி வால்ஸ்டீரீட் போராட்டம் வரை புயலாக வீசியது. அதற்கு அடிப்படையாக அமைந்த காப்பீட்டுக்கழகங்களின் வலைப்பின்னலுக்குள் மனித உடல்கள் சிக்கிக்கொண்டு எப்படி வட்டி மூலதனத்திற்குள் தங்கள் உறுப்புகளை இழக்கிறது என்பதும் பணம் என்றால் என்ன? கருணை ஏன் பணத்தால் முற்றிலுமாக குரூர மனப்படிவாக மாறியது என்கிற கேள்விகளை எழுப்புவதே பியாட்டா. இது மூன்றாம் உலக நாடுகளில் இன்னும் ஒருசில வருடங்களில் நடைப்பெறப்போகும் அவலத்தை முன் அனுமானித்து வெளிவந்து உள்ள திரைப்படம். தொடரும் உலகமயமாதல் மொத்த சமூகத்தையும் ஊனமுற்ற சமூகமாக வாழ வழியற்ற சமூகமாக மாற்றிவிடும் எந்திரவியலை தனது அழகியலோடு சொல்ல முனைகிறது.

இரண்டு அடுக்குகளில் இயங்குகிறது இத்திரைப்படம். ஒன்று பணம் ஒன்றே குறி என்று குற்றங்களை செய்ய வைக்கும் அரசியல்பொருளாதார அடுக்கு. அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டு கருணை, பாசம், அன்பு என்று இடிபலாக்கம் என்கிற தாய்-மகன் என்கிற லிபிடனல் பொருளியலின் அலகான குடும்ப அமைப்பாக  முனையும் சமூகஉளவியல்சார்ந்த அடுக்கு. முதலாளித்துவம் குற்ற உணர்ச்சியின் உளவியல் வடிவமாக உருவாக்கி வைத்துள்ள இடிபல்-சிக்கல் என்கிற தாய்-மகன் உறவும், அதன் நீட்சியாக நடைபெறும் கொலையும் என்பதாக தற்கொலையில் துவங்கி கொலையில் முடிகிறது.
கருணையற்ற இளைஞனான லீ காங்-டு (லீ ஜங்-ஜின்) சுயுமைதூனம் செய்துகொள்ளக் கூடிய குடும்பம் என்கிற நிறுவனமற்ற தனியன். அவனது தொழில் கடன் தந்த நிறுவனத்திற்கு கடனை வசூலித்து தருவது. ஒன்றுக்கு பத்து மடங்கு வட்டி என்பதால் கடன் வாங்கிய யாரும், அதனை அடைக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஒப்பந்தப்படி அவர்களது உடல் உறுப்புகளை சிதைத்து காப்பீட்டுக்கழகத்தில் பெறும் ஈட்டுத்தொகையில் கடனை ஈடுசெய்து கொள்வதற்காக, கடன்பெற்றவர்களின் உடல் உறுப்பை சிதைத்து கடனை வசூல் செய்கிறான். இப்படி தங்களது கடன்தொகைக்காக, பணத்திற்காக உடல் ஊனமுற்று அதனால் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

விவசாயம் அழிந்து அதனால் கடன்சுமை அதிகரித்து தற்கொலைசெய்துகொள்ளும் இந்திய விவசாயிகளின் நிலையைப்போல ஆகிவிடும் அந்த ஊனமுற்றவர்கள், இவன் கொடூரமான சாவை அடைவான் என்று சபிக்கிறார்கள். இன்றைய பொருளியல் வளர்ச்சி என்பது எப்படி வாழ முடியாத நிலைக்கு தள்ளுகிறது என்பதை வெளிப்படுத்தும் குறியீட்டு நிகழ்வுகளாக தொடர்ந்து உறுப்பு சிதைத்தல் நிகழ்கிறது. மகிழ்ச்சியான வாழ்விற்கு வீட்டுக்கடன் வசதிகள் என்கிற ஒரு விளம்பர அட்டையை இடையில் காட்டிச்செல்லும் காட்சியின்மூலம், வங்கிகள் வழியாக கடன் பெற்று மகிழ்ச்சியை அனுபவிக்கத் தூண்டும் நுகர்வு வெறியின் மற்றொரு பக்கம் ஊனமுற்ற வாழ்வாக மாறி உள்ளதை விவரிப்பதாக உள்ளது. கடன் அட்டைகளின் பின் நிகழும் வட்டி அதிகரிப்பும், அதனால் கட்டமுடியாத நிலையில் நிகழும் ரௌடியிசக் கொடூரங்களும் பதிவாகி உள்ளது இத்திரைப்படத்தில்.

முதல்காட்சியில் ஒருவன் ஊனமுற்ற கால்களுடன் தற்கொலை செய்துகொள்கிறான். ஒரு பெண்ணின் அலறும் குரலுடன் துவங்குகிறது.  அடுத்த காட்சியில் சுயமைதூனம் செய்துகொள்ளும் நாயகனின் இறுக்கமான முகத்தோடு ஒரு இரும்பு பட்டறை உள்ளவனிடம் கடனை வசூலிக்க வருவதாக போன் செய்வதுடன் தொடர்கிறது. அந்த பட்டறையாளன் பயத்தில் அலறியபடி கதவை சாத்திவிட்டு தன்னோடு பணிபுரியும் தனது மனைவியை மிகவேகமாக புணர்கிறான். இந்த நெருக்கடியான அவலத்தில் உனக்கு இது கேட்கிறதா? என்கிறாள் அவள். அதற்கு அவன் எனக்கு இப்போது உள்ள பதற்றத்தில் இது தேவையாக உள்ளது என்கிறான். புணர்ச்சி என்பது உடலின்பம் என்பதை தாண்டிய ஒரு உணர்வுத் தணிப்பானாக மாறிவிட்டதை பதிவு செய்யும் காட்சி.

முதலாளியம் உடலுக்குள் முதலீடு செய்துள்ள பாலுந்த பொருளியில் இதுதான். ஒருவகை கிளர்ச்சியை ஊட்டி நுகர வைப்பதும், பிறகு உணர்வுத்தணிப்பானாக பாலியலை வடிகாலாக்குவதும். கடனை வசூலிக்க வந்தவனிடம் அந்த பெண் தனது உடைகளை களைந்துவிட்டு நிற்பாள். கடனிற்காக உடலை விற்க தயார் என்றாலும், பணத்தை பெறுவதில் குறியாக உள்ளவன், அதை நிராகரித்து விடுகிறான். பெண் உடல் என்பது பணமதிப்பின் முன்பு, உடல் இன்பம் சார்ந்த விழைச்சுகள் அற்றதாக மாறியுள்ளதை பிம்பமாக்கும் ஒரு காட்சி. குடும்ப வெளிக்கு வெளியே பெண் உடல் தாசியாகி, போர் எந்திரங்களால் வேட்கை தணிப்பு உடல்களாகி, முதலாளியத்தில் பாலியல் தொழிலாளர்களாகி பண மதிப்பு பெற்றதை, உலகமயமாதலின் பணவெறியில் பொருளற்றதாக மாறிவிடுவதை வெளிப்படுத்துகிறது. உடலின்ப விழைச்சு என்பது மெய்நிகர் உலகில் வெறும் தொடுதிரை உணர்வுகளாகி விட்டதின் எதிர்விளைவே, சுயமைதூனம் செய்பவன் மெய்யுலகில் வரும் பெண் உடலை நிராகிரிக்கிறான் என்பதாக இதை காட்சிப்படுத்திக் கொள்ள முடிகிறது. 

கடன் பெற்றவனின் விரல்களை எந்திரத்தில் வைத்து துண்டித்து காப்பீட்டு கழகத்தின் ஈட்டுத்தொகையை பெற்றுவிடுவான் நாயகன். இதில் பெண்உடல், உறுப்பின் சிதைவு, எல்லாம் பணத்தின் பதலீடாக மாறிவிடுகிறது. புணர்ச்சி என்பது இந்த வட்டிமூலதன சுழற்சியில் வெறும் எந்திரங்களின் உணர்வுத் தணிப்பானாக மாறிவிடுகிறது. உடல்சார்ந்த கலவி உணர்வு தணிக்கும் புணர்ச்சியாகிவிடுகிறது இன்றைய சமூகத்தில். இங்கு மனிதன் இல்லை. பணத்தின் உள்ளீட்டில் வெறும் நுகரும் காகித வடிவமாக மாறிவிடுகிறான்.

காரணம் இன்பம், உணர்வு போன்றவை இல்லாத ஒரு எந்திரமாகவே மாறிவிட்டவன் அவன். முதலாளியப் பரோனியாவின் உச்சமான உலகமயமாதலில் உருவான மனித நிலையிது. அதாவது, மனிதன் ஒரு மனித-எந்திரமாக ரோபோவாக மாறிவிட்ட நிலை. மனிதநேயம் என்பதை தாண்டிய ஒரு எந்திரவியல் இயக்க நிலை. பியாட்டாவில் நாயகன் பாத்திரம் மிக நுட்பமாக அந்த எந்திர மனிதனாக பிம்பப் படுத்தப்பட்டு உள்ளது. எந்திரங்களால் எந்திரங்கள் கொண்டு ஆளப்படும் ஒரு உலகாக மாறிவரும் மூன்றாம் உலகே இதன் களம்.
முதல் பாதியில் காட்டப்படும் பல காட்சிகள் மனித எந்திரம் என்பது முதலாளிய மனப்பிறழ்ச்சியில் இயங்கும் பணத்தின் விழைச்சில் இன்பம் கண்டுவிட்ட ஒன்றாக இருப்பதையே குறியீடாகக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன. மனித உறவுகள் அவற்றின் உணர்வெழுச்சிகள் அன்பு பாசம் காதல் எதுவும் இல்லாதவனாக கட்டமைக்கப்பட்டு உள்ளான் நாயகன். முதல் 45 நிமிடங்கள் மேற்கத்திய பார்வையாளர்களால் காணமுடியாமல் முகச்சுழிப்பையும் அதிர்ச்சியையும் உருவாக்கியவை என்கின்றன பல விமர்சனங்கள். காரணம், தனது உள்ளிருத்தப்பட்டுள்ள பிறழ்ச்சியை திரையில் வெளிப்படுத்தும்போது ஏற்படும் அசூசையே அது. அதாவது, தனக்குள் உள்ள பிறழ்ச்சி திரையில் வெளிப்படுவதால் ஏற்படும் ஒருவித முகச்சுழிப்பு.

இச்சினிமாவின் இரண்டாவது அடுக்கில் ஒரு பெண் ஜங் மி-ஸன் (ஜோ மின்-சூ) அவனை தொடர்வாள். அவனுக்கு ஏன் அவள் தன்னை தொடர்கிறாள் என்பது புரியாத நிலையில் அவளை துரத்தியடிக்கிறான். அவளோ அவனை தன்னால் சிறுவயதில் கைவிடப்பட்ட மகனாகவும், தான் மீண்டும் அவனோடு இணைந்து வாழவும் விரும்புவதாக சொல்லி அவனை தொடர்கிறாள். அவள் தனது தாய் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை ஏற்க முடியாது என்கிறான். தாய்-மகன் என்கிற உறவிற்கு எதை ஆதாரப்படுத்த முடியும். அதற்கு அவன் தனது உடலில் உள்ள ஒரு அடையாளத்தை சொல்லும்படி கூற, அவள் சிறுவயதில் பிரிந்ததால் தெரியாது எனக்கூற, தனது தொடையில் உள்ள அந்த அடையாளப் பகுதியை அறுத்து அவளை தின்னும்படி சொல்வான். அவள் அதை தின்பாள். அடுத்த காட்சியில் அவளது குறியில் தனது கைகளை நுழைத்து, இங்கிருந்துதானே வந்தேன் இதற்குள்ளேயே போய்விடுகிறேன் என்று, அவளை சித்ரவதை செய்வான், அவளை பாலியல் பலவந்தம் செய்து புணர்வான்.

இங்கு இடிபல் என்கிற மர்மமாக, தெரியாமல், யதேச்சையாக நடந்த ஆழ்மனதில் தங்கிவிட்டதாக சொல்லப்பட்ட ஒன்று, தாயை அடையாளம் காணும் செயலாக தெரிந்தே நடப்பதாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குநர். புணர்ச்சிக்கு வழிகொடுப்பதன் மூலம் அவள் தயாகிறாள். இடிபல் என்ற கருத்து இங்கு உண்மையாக செயல்படுத்தப்படுகிறது தாயை அடையாளம் காணும் செயலாக. அதாவது தாய் என்ற உறவின் கருத்தியல் அடிப்படையை இடிபல் சிக்கலின் அடையாளமாக மாற்றிய முதலாளிய உளவியல் சிந்தனை[1] பற்றிய ஒரு விமர்சனமாகக் கொள்ளலாம். முதலாளித்துவத்தின் உளவியல் கட்டமைப்பில் முக்கிய பங்களிப்பை செய்த இடிபலாக்க செயல் இங்கு ஒருவிதமான அடையாளம் காணும் குரூரமாக வெளிப்படுகிறது.

முதலாளித்துவ “நியுக்ளியர் பேமலி” எனப்படும் கருக் குடும்பம் என்கிற நிறுவனம் எப்படி இடிபலால் கட்டப்படுகிறது என்பதை சொல்வதாக, அல்லது இடிபல் இல்லாமல் குடும்பம் உருவாக முடியாது என்பதை சொல்வதாக, தாயாக வந்த பெண்ணை புணர்ந்தபின், தனது தாயாகவே அவளை வரித்துக்கொண்டு விடுகிறான். அதன் பின் குடும்பம் பந்தம் பாசம் கருணை என்பதற்குள் நுழைந்துவிடும் அவன் தனது குற்றங்களின் உணர்ச்சிகளிலிருந்து விடுபட முனைகிறான். அதாவது நாயகன் உடலானது குடும்பம் என்கிற நிலமயமாதலுக்கு (டெர்ரிட்டேரியலைஸ்) உட்படுத்தப்படுகிறது. ஆனால், தாயாக வந்தபெண், தனது மகளை கொன்றவன் என்றவகையில் இவனிடம் தாய் என்கிற பாசத்தை ஊட்டி, அவன் கண்முன் தான் கொலையுறுவதன்மூலம் தீரா மனத்துயருக்கும், பிறழ்ச்சிக்கும் அவனை ஆளாக்க முனைகிறாள்.  தாய் என்கிரு கருணை வடிவை இப்படியான ஒரு தண்டணை உணர்வாக மாற்ற முயற்சிப்பாள். இடிபலாக்கம் என்பது சுயதண்டணை சார்ந்த குற்ற உணர்வின் வெளிப்பாடே. முற்றிலும் உளவியல் தளத்தில் நகரும் திரைப்படமானது, தொடர்ச்ச்சியான காட்சிகள்மூலம், ஒரு உளவியல் ஆய்விற்கான பல திறப்புகளைக் கொண்டதாக மாறிவிடுகிறது.

தனது இறந்துவிட்ட மகனுக்காக அவள் பின்னும் ஸ்வெட்டர், மகனாக தன்னை வரித்துக் கொண்டவன் அணிவதற்கான முயற்சியாக சித்தரிக்கப்படும் காட்சிகள் நுட்பமாக தாய்-மகன் பதிலீட்டை செய்கிறது. தந்தை முற்றிலுமாக இருப்பற்று மறைவியக்கம் கொள்கிறார் கடவுள்போல.

திரைப்படத்தில் விரிவாக பேசப்படவேண்டிய பல குறியீட்டு நிகழ்வுகள் உள்ளன. மீன், முயல், ஸ்வொட்டர், கிதார், தனக்குமுன் உள்ள இயற்கையை காணமுயலும் ஊனமுற்ற புத்தபிக்கு இப்படி. இத்தகைய உயிருள்ள உயிரற்ற பொருட்கள் எல்லாம் மிகவும் நுட்பமான பல குறியீடுகளாக கையாளப்பட்டு உள்ளன. பணமதிப்பு மட்டுமே கொண்ட வாழ்வின் ஆன்மீகமற்ற வறண்டுவிட்ட தன்மைப் பற்றிய விமர்சனமாக இத்திரைப்படம் அமைந்து உள்ளது. கருணை ஈரம் அன்பு எல்லாம் கொன்றொழிக்கப்பட்டு கடவுளின் இடத்தை பணம் கைப்பற்றிவிட்ட முதலாளித்துவத்தின் உலகமயம் என்கிற புதிய மதத்தை விவரிக்க முயல்கிறது. தந்தை=பிதா, தாய்=மேரி, மகன்=ஏசு என்ற கிறித்தவ இறைவடிவம் கருக்குடும்ப பிம்ப வடிவமாக ஆழ்த மனித உணர்வாக குறியீட்டைக் கொள்கிறது. வழக்கமான கிம் கி-டுக் திரைப்படங்களைப்போல இல்லாமல், இதில் நேரடியாக முதலாளித்துவத்தின் உலகமயமாதலில் நிதிமூலதன ஆதிக்கத்தின் விளைவுகள் பேசப்பட்டு உள்ளது. பணம் என்பது ஒரு குறிப்பானாகத் துவங்கி இன்று குறிப்பீடாகி அதுவே முழுமையான குறியாக, பொருளாக, அர்த்தமாக மாறிவிட்டதையும், பணம் என்பது கடவுளின் இடத்தை கைப்பற்றி கருணையை கொன்று விட்டதையும் விவரிக்கிறது பியாட்டா. உடலின் பொருள்மதிப்பு என்கிற பிம்பமே இச்சினிமா.


- ஜமாலன் (”கிம்-கி டுக் சினிமாட்டிக் உடல்கள்” (நிழல் வெளியீடு)  என்ற எனது நூலில் வெளிவந்த கட்டுரை) - 24-10-2017



[1] முதலாளியம் கருக்குடும்ப அமைப்புகளின் அடிப்படையாக இடிபலாக்கம் என்பதை உள்வயப்படுத்தி அதற்கான உளவியல் விளக்கங்களை அளித்தது, தனது தொழில்துறை வளர்ச்சிக்காக பாலியல் என்பதை ஒடுக்குமுறையாக கதையாடியது. பாலியல் என்பதை தனது சொல்லாடல் களத்திற்குள் கட்டுப்படுத்தியும் பெருக்கியம் பாலியல் மைய உடல்களாக எல்லா உடல்களையும் சங்கதேப்படுத்தியது (கோடிங்). இவ்வாறாக, பிராய்டியம் முன்வைத்த இடிபலாக்கம் என்பது முதலாளியத்திற்கான உடல்-முதலீட்டை உருவாக்கியது குறித்து நிறைய ஆய்வுகள் வந்து உள்ளன. எனது கார்டீசிய மனங்களும் கார்ட்டுனாகிய உடல்களும் என்ற தொடரில் இது விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தெல்யுஸ்-கத்தாரி இணைந்து எழுதிய ”கேப்பிட்டலிஸம் அணட் ஸ்கீஷோபரோனியா” என்று நூல் தொகுதியில் முதல் நூலான ”ஆண்டி இடிபஸ்” என்ற நூல் பிராய்டிய உளவியல் வேட்கை என்பதை இன்மையாக்கி பற்றாக்குறையாக்கி முதலாளியத்தின் உடல்-முதலீடுகளை உருவாக்கியதை விவரித்து அதற்கு எதிரா ஆன்டி-இடிபல் என்ற கருத்தாக்கத்தை வளர்த்தெடுத்து உள்ளனர். 
Share |
ஜமாலன். Blogger இயக்குவது.